சிங்கப்பூரின் உரிமம் பெற்ற பொதுக்கழிவுகள் அகற்றும் மூன்று துப்புரவுச் சேவை நிறுவனங்களுக்குக் காலத்துக்குட்பட்ட முறையில் அவை செலவிட்ட டீசல் எரிபொருளுக்கான நிதி உதவி தேசிய சுற்றுப்புற வாரியத்தால் வழங்கப்படும்.
அதன் விவரங்களை நீடித்தநிலைத்தன்மை, மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி அவரது லிங்க்ட்இன் சமூக ஊடகப் பதிவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டார்.
உலகில் ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல் சூழலால் ஏற்றமடைந்துள்ள எரிபொருள் விலைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அந்த நிறுவனங்களுக்குத் தற்காலிக உதவி வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான டீசல் செலவுக்கு அந்த நிதி உதவி வழங்கப்படும். பொதுக் கழிவுச் சேகரிப்பாளர்களான ஆல்பா டபிள்யு&சி ஸ்மார்ட் சிட்டி, கொரா என்வையர்மன்ட், 800 சூப்பர் வேஸ்ட் மேனேஜ்மன்ட் ஆகிய அந்த மூன்றும் வாரியத்தின் உரிமம் பெற்றவையாகும்.
மத்திய கிழக்குப் பூசலால் உயர்ந்துவரும் நிர்வாகச் செயல்பாட்டுச் செலவுகள் குறித்துக் கழிவு சேகரிப்புத் துறையில் இருந்து இவ்வாண்டு தொடக்கத்தில் அரசாங்கத்துக்குப் பற்பல கருத்துகள் கிடைத்தன என்று அமைச்சர் விளக்கினார்.
இணைய ஊழியர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் $1 பில்லியன் உதவித் தொகையை அறிவித்தது. அதில் குடும்பங்களும் வர்த்தகங்களும் உள்ளடங்கின.
மாணவர்கள், மூத்தோர், உடற்குறையுள்ளோர் போன்றோருக்கு அத்தியாவசியச் சேவை வழங்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் நிர்வாகச் செலவை எதிர்கொள்ள தற்காலிக நிதிஉதவிகள் அரசாங்கத் திட்டத்தில் அங்கம் வகித்தன. தடையின்றி அவை செயல்படும் வகையில் அது உதவியது.
ஆனால் பொதுக் கழிவுகளைச் சேகரிக்கும் அந்த மூன்று நிறுவனங்கள் அதில் உள்ளடங்கவில்லை.
அந்த மூன்று நிறுவனங்களும் சேவை வழங்கும் பொது, வர்த்தக இடங்களின் மொத்த எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றின் நிதி உதவிகள் அமையும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
ஆகவே காலக்கெடுவோடு குறிப்பிட்ட இலக்குகளின் அடைப்படையில் வழங்கப்படும் இந்த உதவி, தடையின்றி அவை சேவையாற்ற வழிவகை செய்யும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
