கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான எந்தவோர் ஆவணத்தையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
ஊழல் குற்றம் புரிந்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிப், முன்னாள் மன்னர் பிறப்பித்த அரச ஆணை ஒன்று இருப்பதை நிரூபிக்கப் போராடி வருகிறார். அரசாங்கம் அரச ஆணையைச் செயல்படுத்த வேண்டும் எனும் நோக்கில், அவர் சட்ட ரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சென்ற ஆண்டு தமக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டபோது, அந்த அரச ஆணையும் பிறப்பிக்கப்பட்டதாக நஜிப் கூறுகிறார். அதன்படி, அவர் எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை வீட்டிலேயே நிறைவேற்ற முடியும் என்று அவர் சொல்கிறார்.
நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறைத் தண்டனை அப்போதைய மன்னர் அல் சுல்தான் அப்துல்லா அகமது ஷா வழங்கிய பொது மன்னிப்பைத் தொடர்ந்து பாதியாகக் குறைக்கப்பட்டது.
மேலும் நஜிப்புடன், முன்னாள் மன்னரின் மாளிகையும் அந்த ஆவணம் இருப்பதாகக் கூறுகிறது. அதிகாரிகள் அதனைப் புறக்கணிப்பதாக நஜிப்பின் சட்டக் குழு கூறுகிறது.
அந்த ஆவணம் தலைமைச் சட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டது என்றும் தமக்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படவில்லை என்றும் திரு அன்வார் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“பொது மன்னிப்பு வாரியத்திற்கு மன்னர் தலைமை தாங்குவதால், பின்னர் மாளிகையில் மன்னர் மாற்றம் இடம்பெற்ற நேரத்தில், தலைமைச் சட்ட அதிகாரி அந்த ஆவணத்தை அங்கு அனுப்பினார். நாங்கள் எதையும் மறைக்கவில்லை,” என்று திரு அன்வார் கூறினார்.
நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பில் அரசு மாளிகையிடமிருந்து எந்தவோர் அதிகாரபூர்வ தகவலையோ கட்டளைகளையோ பெறவில்லை என்றும் நஜிப்புக்கு வீட்டுக்காவலை அனுமதிக்கும் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் மலேசியச் சட்ட அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) கூறியது.