அரசாங்க சேவை சம்பளத் திட்டம் மறுஆய்வு: அன்வார்

அரசாங்க சேவை சம்பளத் திட்டம் மறுஆய்வு: அன்வார்

1 mins read
f25dd7a2-34df-49f0-9fd9-c7ac48e33fbb
நெகிரி செம்பிலான் அரசாங்க ஊழியர்களிடம் உரையாற்றிய பிறகு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுஆய்வு பற்றி தெரிவித்தார்.  - படம்: பெர்னாமா

சிரம்பான்: அரசாங்க சேவை சம்பளத் திட்டத்தை அரசாங்கம் நாடெங்கிலும் மறுஆய்வு செய்யவிருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். அடுத்த வார அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கலந்து பேசப்படும்.

சம்பளத் திட்டம் ஆகக் கடைசியாக 2013ல் மறுஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளத் திருத்தங்கள் செய்யப்படவில்லை என்பதால் மறுஆய்வு செய்ய முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

“அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக (மறுஆய்வுப் பரிந்துரையை) நாங்கள் தாக்கல் செய்வோம். மறுஆய்வுக் குழுவை அமைப்பதன் தொடர்பில் அரசாங்கச் சேவை தலைமை இயக்குநரும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரும் என்னுடன் பகிர்ந்துகொண்ட கருத்துகளை நான் ஏற்றுக்கொண்டேன்.

“அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் பொதுவாகவே மிகவும் குறைவாக இருக்கின்றன. எனவே, நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இவ்விவகாரத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்வது நியாயமே. சில மாற்றங்கள் செய்வதற்கு வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பிரதமர் அன்வர்.

நெகிரி செம்பிலான் அரசாங்க ஊழியர்களிடம் உரையாற்றிய பிறகு பிரதமர் மறுஆய்வு பற்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, நாடெங்கிலும் உள்ள மலேசிய ஆயுதப்படை குடும்ப வீடுகளைச் சீரமைக்கவும் பராமரிக்கவும் அரசாங்கம் கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியிருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார்.

“ராணுவக் குடியிருப்புகளின் புறக்கணிக்கப்பட்ட நிலைமையை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, சீரமைப்புக்கு உடனடியாக நிதியளிக்க அங்கீகாரம் அளித்தேன். காவல்துறையின் குடியிருப்புகளுக்கான கூடுதல் ஒதுக்கீடுகளை நாளை அறிவிப்பேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்