கோலாலம்பூர்: உலகளாவிய விநியோக நெருக்கடியால் வேலையிழந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் கூடுதல் நடவடிக்கைகளை மலேசிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கவிருக்கிறது.
வேலையிழந்த பட்டதாரிகள் மற்றும் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்களின் திறமைகள் வீணாவதைத் தடுக்கும் வகையில் இந்த முன்னெடுப்புகளில் அவர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“வேலையிழந்த பட்டதாரிகள் மற்றும் பட்டயச் சான்றிதழ் பெற்றவர்கள் உட்பட, வேலையிழந்தவர்களுக்கு உதவுவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை நான் விரைவில் அறிவிப்பேன்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) கோலாலம்பூரில் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வட்டமேசை அமர்வுக்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசிய மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர், நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதற்கு முன்னர், உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, ‘புடி மடானி ரோன்95’ திட்டத்தின் கீழ் பெட்ரோல் விலையைத் தக்கவைப்பது மற்றும் சாபா, சரவாக்கில் டீசல் மானியங்களைத் தொடர்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது.
தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், சிறு விவசாயிகளுக்கு வேளாண்-சரக்கு மற்றும் ‘புடி’ டீசல் திட்டங்களின் கீழ் அதிக மாதாந்தர உதவித்தொகை; நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகைகளை அதிகரித்தல்; குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க ஐந்து பில்லியன் ரிங்கிட் வரையிலான நிதியுதவி உத்தரவாதங்கள் ஆகியவை கூடுதல் நடவடிக்கைகளில் அடங்கும்.
இவ்வாண்டு (2026) பிப்ரவரியில் மலேசியாவின் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாக இருந்தது. அப்போது 506,800 பேர் வேலையில்லாமல் இருந்தனர் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது.

