ஜோகூர் பாரு: பொருளியல் நெருக்கடி அதிகரித்துவந்தாலும், எரிபொருள் விலையை உயர்த்துவதில் மலேசிய அரசாங்கம் தீவிரம் காட்டாது என அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், மானியச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் புத்ராஜெயா மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விலைகளை உயர்த்துவதில் அவசரம் காட்ட கூடாது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். முதலில் நாம் பயன்பாட்டை நிர்வகிக்க வேண்டும். அத்துடன், அனைத்துத் தரப்பினருக்கும் சீராக எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் அவர்.
ஜோகூர் பாருவில் ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 5) நடந்த ஜோகூர் கெஅடிலான் ராக்யாட் கட்சி (பிகேஆர்) மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார், மானியங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பொருளியல் ஆலோசகர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் வலுவான கருத்துகள் முன்வைக்கப்படுவதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், எந்தவொரு முடிவும் மக்கள்மீது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“நெருக்கடிகள் இருப்பது உண்மைதான். நாங்கள் அதை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறோம்,” எனத் திரு அன்வார் கூறினார்.
விவசாயிகள், போக்குவரத்து நிறுவனங்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்ற முக்கியக் குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
விலை மாற்றங்களைச் சிலர் அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய ஒப்பீடுகள் விரிந்த பொருளியல் சூழலில் பார்க்கப்பட வேண்டும் என்றார்.
எரிபொருளின் விலை திடீரென உயர்த்தப்பட்டால், அது பொருளியல் சவால்களை உருவாக்கி, வாழ்க்கைச் செலவைப் பாதிக்கும் எனத் திரு அன்வார் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் உள்ளிட்ட முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களும் பொருளியல் வளர்ச்சிக்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.

