45.6 மில்லியன் ரிங்கிட்டில் அரிசி ஆலை

அரிசி உற்பத்தியையும் விவசாயிகள் வருமானத்தையும் பெருக்க மலேசிய அரசாங்கம் திட்டம்

45.6 மில்லியன் ரிங்கிட்டில் அரிசி ஆலை

1 of 2
படம்: பெர்னாமா
படம்: பெரித்தா ஹரியான், மலேசியா

08 Mar 2026 - 5:39 pm

1 mins read

ஜெர்லுன்: மலேசியாவின் அரிசி உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய அரிசி ஆலையை உருவாக்க 45.6 மில்லியன் ரிங்கிட் நிதியை மலேசிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

கெடா மாநிலத்தின் மெகாட் தேவா பகுதியில் ஆலை அமைக்கப்படும் என்று விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு கூறினார்.

நெல் சேமிப்பு, பதப்படுத்துதலை முறைப்படுத்தவும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கவும் இந்த முயற்சி உதவும் என்றார்.

நடப்பாண்டில் ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 6.1 டன் நெல் விளைச்சலை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரிசித் தன்னிறைவு விகிதத்தை 2030க்குள் 70 விழுக்காடாக உயர்த்த மலேசியாத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்டமைப்பு, மேம்பாடு, பராமரிப்பு எனும் முன்முனை அணுகுமுறை 2026-2040 கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் பழைய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும். நடப்பாண்டில் 2,000 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்ப்பாசனக் கால்வாய்கள், 1,346 கிலோமீட்டர் விவசாயச் சாலைகளை மேம்படுத்த அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வேளாண் துறை எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என முகமட் சாபு உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்