கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.
உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியன் இஸ்மாயில் திங்கட்கிழமை (ஜனவரி 6) பொது மன்னிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளபோதும், கூடுதல் நடவடிக்கைகளுக்காகவும் முடிவுக்காகவும் அரசாங்கம் அதனை நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக அரசாங்கப் பேச்சாளருமான திரு ஃபாமி தெரிவித்தார்.
“பொது மன்னிப்பு வாரியத்திடமிருந்து கடிதத்தைப் பெற்ற உள்துறை அமைச்சு அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கி, சட்டத்தின் அடிப்படையில் அதனை நடைமுறைப்படுத்தியது.
“அரச ஆணை (royal addendum) குறித்த விவரங்கள் பின்னர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்,” என்றார் திரு ஃபாமி.
இந்நிலையில், திரு நஜிப்பின் வழக்கில் அரச ஆணை தொடர்பாக எதுவும் மறைக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் கூறியுள்ளார்.
“நாம் நீதிச் செயல்முறையை மதிக்கிறோம் என்பதுதான் வேறுபாடு. ஆழமாகச் சிந்திக்காதவர்களால் புரிந்துகொள்ள முடியாது,” என்று பக்கத்தான் கெஅடிலான் கட்சியின் (பிகேஆர்) இளையர் பிரிவு துணைத் தலைவர் முகம்மது காமில் அப்துல் முனிம் கூறினார்.
அரச ஆணை உத்தரவை அரசாங்கம் மறைப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தனிநபர்களுக்கு எதிராக நாடு முழுதும் காவல்துறை புகார்கள் செய்யப்படும் என்று ‘பிகேஆர்’ இளையர் பிரிவு தெரிவித்தது.