சட்டத்திற்கு இணங்காத சமூக ஊடகத் தளங்களை மூட மலேசியா முடிவு

சட்டத்திற்கு இணங்காத சமூக ஊடகத் தளங்களை மூட மலேசியா முடிவு

2 mins read
5a8fd59c-e416-41ca-9e4e-63e42ebace04
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மலேசிய துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: விதிமுறைகளுக்கு இணங்காத சமூகத் தளங்களுக்கு 2025 ஜனவரி முதல் மலேசியாவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டுத் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி தெரிவித்து உள்ளார்.

தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998ன் கீழ் வகுக்கப்பட்டு உள்ள கைப்பேசிச் சேவை வழங்குநர் உரிம விதிமுறைக்கு உட்படவில்லை என்று கண்டறியப்படும் சமூக ஊடகத் தளங்களும் இணையத் தகவல் சேவைகளும் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை 2025 ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று திரு ஹமிடி கூறியதாக மலேசியாவின் தேசிய நாளிதழான பெரித்தா ஹரியான் தெரிவித்து உள்ளது.

சமூக ஊடகத் தளங்களையும் இணையத் தகவல் சேவைகளையும் மூடும் நடவடிக்கைகள் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்சிஎம்சி) அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை சுமுனில் அம்னோ கட்சிப்பிரிவு கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) திரு ஹமிடி அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சமூக ஊடகங்களையும் இணையத் தகவல் சேவைகளையும் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறை கட்டமைப்பு ஆகஸ்ட் 1 முதல் நடப்புக்கு வர இருக்கும் வேளையில் அது தொடர்பாக திரு ஹமிடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கட்டமைப்பை ஆணையம் உருவாக்கி உள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை ஆணையம் வெளியிட்டது.

புதிய விதிமுறைகள் நடப்புக்கு வந்த பின்னர் உரிமம் பெறத் தவறுவது குற்றம் என்றும் அதற்குத் தகுந்த நடவடிக்கை சட்டப்பிரிவு 588ன்கீழ் எடுக்கப்படும் என்றும் அதில் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.

புதிய விதிமுறைக் கட்டமைப்பு, உரிமம் பெறத் தகுதிபெறும் சமூக ஊடகத் தளங்களை மட்டுமே கட்டுப்படுத்தும்; அதனைப் பயன்படுத்துவோருக்கு எந்த கட்டுப்பாட்டையும் அது விதிக்கவில்லை.

நாட்டில் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் மற்றும் இணையத் தகவல் சேவைகள் மலேசியச் சட்டதிட்டங்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இணங்க புதிய அமலாக்க நடவடிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அரசாங்கத்திற்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துகளை ஒடுக்க அரசியல் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட இருக்கும் நடவடிக்கைகள் இவை என்று வெளியான குற்றச்சாட்டுகளை திரு ஸாஹிட் மறுத்தார்.

குறிப்புச் சொற்கள்