ஜகார்த்தா: கிராப் நிறுவனம், பயனீட்டாளர்களின் அனுபவத்தை இன்னும் மெருகேற்றும் வகையில் தனது செயலியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் அந்த 13 அம்சங்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்வதை இன்னும் சுலபமாக்கவிருக்கிறது.
மின்கார்களுக்கு மின்னூட்டம் செய்யும் மையம் எங்கு அமைந்துள்ளது என்பதைக் காட்டுவதுமுதல் கடைத்தொகுதிகளில் வழிகாட்டுவதுவரை பல வகைகளில் உதவி புரியவிருக்கிறது செயலியில் அறிமுகம் செய்யப்படும் புதிய வரைபடம்.
திறன்பேசிகளில் உள்ள நாள்காட்டிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரைச் சந்திப்பதற்கு எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பவேண்டும் போன்ற நினைவூட்டலையும் செயலியின் புதிய அம்சங்கள் தரும்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஷங்ரி-லாவில் நடைபெற்ற வருடாந்தரக் கூட்டத்தில் கிராப்எக்ஸ் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் புதிய அம்சங்கள் செயலியில் அறிமுகம் செய்யப்படும்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாத ஒருவர் இன்றைய சூழலுக்குப் பொருந்தாதவராக மாறிவிடுவார். செயற்கை நுண்ணறிவை நாம் பற்றிக்கொள்ளவேண்டிய நேரம் இது,” என்றார் கிராப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அண்டனி டான்.
தென்கிழக்காசிய நாடுகளில் உள்ளோரை முன்னேற்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகம் செய்வதாகத் திரு டான் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கிராப் அறிவித்துள்ள மற்றோர் அம்சம் செயற்கை நுண்ணறிவுத் துணை (Grab Assistant AI). அது, அன்றாட வாழ்க்கையின் மனச் சுமையைக் குறைக்க கைகொடுக்கும் என்று கிராப் சொன்னது.
செயலியில் உள்ள அந்த அம்சத்தில் குழுவின் அளவு, உணவுத் தேர்வு போன்ற குறிப்புகளைப் பதிவிட்டால் போதும். பயனீட்டாளர்களுக்குத் தகுந்த உணவகத்தை அந்த அம்சம் தேடித்தரும்.
செயலியின் அந்த அம்சம் அறிமுகமாகும் முதல் நாடு சிங்கப்பூர். அதையடுத்து இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் அந்த அம்சம் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.

