அபுதாபி: கடந்த 19 ஆண்டுகளாக ஷார்ஜாவில் வசித்து வரும் ஆஷிக் பதின்ஹரத்துக்கு அண்மையில் அபுதாபியில் இடம்பெற்ற பரிசுச்சீட்டுக் குலுக்கலில் 25 மில்லியன் (S$9.23 மில்லியன், ரூ.59.25 கோடி) பரிசுத்தொகை விழுந்தது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது ஆஷிக், கடந்த 19 ஆண்டுகளாக ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.
“கடந்த பத்தாண்டுகளாகப் பரிசுச்சீட்டு வாங்கி வருகிறேன். இதுவரை கிட்டத்தட்ட 100 முறை வாங்கியிருப்பேன். இறுதியாக, முதன்முறையாக எனக்குப் பரிசு விழுந்துள்ளது,” என்று கல்ஃப் நியூஸ் ஊடகத்திடம் அவர் சொன்னார்.
இம்முறை கடந்த ஜனவரி 29ஆம் தேதியன்று ஆறு பரிசுச்சீட்டுகளை 1,000 திர்ஹம் கொடுத்து அவர் வாங்கினார்.
சொத்துச் சந்தைத் துறையில் பணிபுரிந்துவரும் ஆஷிக், நிகழ்ச்சி நெறியாளர்கள் தம்மை அழைத்து அந்த மகிழ்ச்சியான தகவலைச் சொன்னபோது தன்னால் நம்பவே முடியவில்லை என்றார்.
“கோழிக்கோட்டில் உள்ள என் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் அழைப்பு வந்தது. சொத்துச் சந்தைத் துறையில் இருப்பதால் மோசடியாக இருக்குமோ என்று முதலில் சந்தேகப்பட்டேன்,” என்று ஆஷிக் சொன்னார்.
தன்னந்தனியாளாக 25 மில்லியன் திர்ஹமை அள்ளிச் செல்லும் ஆஷிக், அப்பணத்தைக் கொண்டு சொத்துச் சந்தைத் துறையில் தமது தொழிலை விரிவுபடுத்தப் போவதாகக் கூறினார்.
அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவர்களுடன் அவருடைய பெற்றோரும் இரு சகோதரிகளும் இம்மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்துடன் தான் நின்றுவிடப்போவதில்லை என்ற ஆஷிக், இனியும் தொடர்ந்து பரிசுச்சீட்டு வாங்கப்போவதாகச் சொன்னார். தம்மைப்போல் மற்றவர்களையும் அதிர்ஷ்டம் தேடி வரலாம் என்பதால், பிறரையும் அவர் பரிசுச்சீட்டு வாங்க ஊக்குவிக்கிறார்.