பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 8 பேர் காயம்

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 8 பேர் காயம்

1 mins read
7cec70b6-625a-4a07-a46b-fee878bad18e
தென்மேற்கு கிரீஸில் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தில் உள்ள பட்ராஸ் துறைமுகத்தை ஏதென்ஸுடன் இணைக்கும் பாலம் இடிந்து விழுந்தது. - படம்: ஏஎஃப்பி

ஏதென்ஸ்: மேற்கு கிரீஸில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சம்பவத்தின்போது பாலத்திற்கு அடியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த குறைந்தது இருவரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றதாகவும் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இஆர்டி தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புனரமைப்புப் பணியின் பாதுகாப்பு அதிகாரி. மற்ற இருவரும் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் எனக் காவல்துறை கூறியுள்ளது.

காயமடைந்த எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில் கிட்டத்தட்ட 35 தீயணைப்பு வீரர்கள்,12 தீயணைப்பு வாகனங்கள், வானூர்திகள், சிறப்பு மீட்பு வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டன.

விபத்துக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 6 மில்லியன் ($8.8 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) யூரோ செலவிலாக சீரமைப்புப் பணி 2021ல் தொடங்கியது.

அந்தப் பாலத்தில் நிலைத்தன்மை பிரச்சினைகள் இருந்ததாகவும் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்ததாகவும் கிரீஸின் நிலநடுக்கத் திட்டமிடல், பாதுகாப்பு அமைப்பின் தலைவர் இஆர்டி தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கிரீஸ்விபத்து