ஏதன்ஸ்: ஏதன்சின் தென்கிழக்குப் பகுதியில் ஜூன் 30ஆம் தேதி பிற்பகலில் பெரிய அளவிலான காட்டுத் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கிரீஸ் தற்போது மிகக் கடுமையான காட்டுத் தீச்சம்பவக் காலகட்டத்தை எதிர்நோக்குகிறது. அங்கு வெப்பநிலை 44 டிகிரி செல்சியசைத் தொட்டுள்ளது.
ஏதன்சுக்கு அருகில் உள்ள ‘கெரட்டியா’ மாவட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி தொடங்கிய தீ, வீடுகளுக்கு அருகே பற்றி எரிந்துகொண்டிருந்ததாக ஏதன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்தப் பகுதியில் கடுங்காற்று வீசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் தீச்சம்பவத்தில் குறைந்தது மூன்று வீடுகள் முற்றிலும் அழிந்துபோனதாக ‘இர்ட்நியூஸ்’ ஒளிவழி கூறியது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, ஏறக்குறைய 140 தீயணைப்பாளர்களுடன், 39 வாகனங்கள், எட்டு ஹெலிகாப்டர்கள், ஒன்பது விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அவசர எச்சரிக்கை முறை செயல்படுத்தப்பட்டது. தலைநகருக்கு அருகில் உள்ள ஆறு பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதே பகுதியில் அதற்கு முந்தைய நாள் மற்றொரு காட்டுத் தீச்சம்பவம் ஏற்பட்டது. இருப்பினும், அது பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஜூன் 29ஆம் தேதி ‘செரிஃபொஸ்’ தீவில் ஏற்பட்ட பெரிய அளவிலான காட்டுத் தீயை, ஜூன் 30ஆம் தேதி தீயணைப்பாளர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அந்தத் தீவின் தென்மேற்குப் பகுதி முற்றிலும் எரிந்துபோனது. வீடுகள், கிடங்குகள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை சேதமுற்றன.
ஜூன் 29ஆம் தேதி, கிரீஸ் முழுதும் 40க்கும் மேற்பட்ட காட்டுத் தீச்சம்பவங்கள் நேர்ந்ததாகவும், காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிரமமான காட்டுத் தீச்சம்பவக் காலகட்டத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் கிரியாகொஸ் மிட்சொட்டாக்கிஸ் கிரேக்க மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

