வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரவாசத் தகுதியைப் பெற விரும்பும் வெளிநாட்டினர் அதற்கான விண்ணப்பத்தை அவர்கள் சொந்த நாட்டிலிருந்து சமர்ப்பிக்கவேண்டும் என்று அமெரிக்கக் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர், நிரந்தரவாசத் தகுதியைப் பெற விரும்பினால் சொந்த நாட்டுக்குச் சென்று அதற்காக விண்ணப்பிக்கவேண்டும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
அந்தக் கொள்கை சட்டத்திற்கு ஏற்ப குடிநுழைவுக் கட்டமைப்பை நிர்வகிக்க அதிகாரிகளுக்கு உதவும் என்றது அமைச்சு.
பிற குடிநுழைவு விவகாரங்களில் மனிதவளத்தை மாற்றிவிடவும் புதிய கொள்கை வகைசெய்யும் என்றும் அமைச்சு சுட்டியது.
இந்நிலையில், ‘எச்ஐஏஎஸ்’ எனும் உதவிக் குழு, ‘யுஎஸ்சிஐஎஸ்’ அமைப்பின் புதிய கொள்கையைச் சாடியுள்ளது. அகதிகளுக்கான சேவையை வழங்கும் அதுபோன்ற பிற குழுக்களும் புதிய கொள்கையால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தோர் பல வகைகளில் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தது.
கடத்தல், துன்புறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு அனுப்புவது நியாயமற்ற செயல் என்று அந்தக் குழுக்கள் குறிப்பிட்டன.
அமெரிக்காவுக்குள் செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிபர் டோனல்ட் டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் இம்மாதம் 22ஆம் தேதி புதிய கொள்கை அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரியில் திரு டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதை அடுத்து 100,000க்கும் அதிகமான விசாக்களை உள்துறை அமைச்சு ரத்து செய்தது.

