கோப்பன்ஹேகன்: டேனிஷ் தந்தையர்களுக்குத் திருமணத்திற்குப் புறம்பாக பிறந்த கிரீன்லாந்து மக்கள், தங்கள் தந்தையுடனான உறவை சட்டபூர்வமாக நிலைநாட்ட முடியாததால் அவர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக கூறி, அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வழக்கு தொடுக்கப்பட்டது.
1938 முதல் 1963 வரை மேற்கு கிரீன்லாந்திலும் 1974 வரை மீதி பகுதிகளிலும் டேனிஷ் தந்தையர்களுக்குப் பிறந்த இத்தகைய குழந்தைகள் அங்கீகரிக்கப்படவில்லை. இது பாகுபாடு என்றும் தங்களது சொத்துரிமையைப் பறித்துவிட்டது என்றும் 26 மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
டென்மார்க் சமூக விவகார அமைச்சின் மதிப்பீட்டின்படி, 1911 முதல் 1974 வரை கிரீன்லாந்தில் பிறந்த 8,000 பேர் ‘சட்டபூர்வமாகத் தந்தையற்றவர்களாகக்’ கருதப்படுகின்றனர்.
அந்த 26 மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகும் வழக்கறிஞர் மேட்ஸ் பிராமிங், இந்த வழக்கில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.
மனுதாரர்களில் ஒருவரான 64 வயது கிளாஸ் ஃபிரடெரிக்சன், தந்தையின்றி வளர்ந்ததால் கடும் பாகுபாட்டைச் சந்தித்ததாகக் கூறினார்.
2011ஆம் ஆண்டு அறிக்கைக்குப் பிறகு அவர்களுக்குச் சொத்துரிமை கோர வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மனித உரிமை அடிப்படையில் இந்த வழக்கு வலுவாக உள்ளதாக வழக்கறிஞர் மேட்ஸ் பிராமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட விசாரணை நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2027 தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
