ஜோகூர் பாரு: மலேசியாவில் முன்னணி சொத்து மேம்பாட்டுக் குழுமமான அஸ்டாக்கா ஹோல்டிங்ஸ் லிமிடெட், சுகாதாரத் தொழில்நுட்பத் துறையில் கால்பதிக்க எவர்குரோன் ஹோல்டிங்ஸ் குழுமத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அஸ்டாக்கா இஸ்கந்தர் மலேசியாவின் மிக முக்கிய சொகுசு வீடுகளை உருவாக்குவதில் முத்திரை பதித்துள்ளது.
மனிதர்களுக்கு உகந்த இயற்கை வெளிச்சத்தையும் கிருமிகளையும் நீக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளக்குகளைத் தயாரிப்பதில் முன்னணி வகிக்கிறது எவர்குரோன் குழுமம்.
உள்ளூர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட எவர்குரோன் குழுமத்தின் விளக்குகள் தற்போது வணிகம் மற்றும் தொழில்துறை சார்ந்து அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மிகப் பெரிய மருத்துவமனை குழுமங்கள், புகழ்பெற்ற உணவு, பானக் கடைகள், மலேசியாவில் உள்ள முக்கிய அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுக்கான சேவையை எவர்குரோன் வழங்கியுள்ளது.
எவர்குரோன் குழுமத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்வழி புதிதாக உருவாக்கப்படும் வீடுகளில் கிருமி நீக்கும் வெளிச்சம் தரும் விளக்குகளைப் பொருத்துவதில் உறுதியுடன் இருப்பதாக அஸ்டாக்கா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலென் கோங் கூறினார்.
ஜோகூரில் உள்ள ‘த அஸ்டாக்கா’, ‘ஆர்டென்’, ‘அலிவா’ போன்ற சொகுசு வீடமைப்புகளை உருவாக்குவதில் முன்னணி வகிக்கும் அஸ்டாக்கா குழுமம், “புத்தாக்கத் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தைத் தொடர்ந்து மெருகேற்ற முயல்கிறோம்,” என்றார் திரு கோங்.
எனவே, எவர்குரோன் குழுமத்தின் தயாரிப்பு வெகுவாகத் தங்களைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். கொவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு கிருமிகளை நீக்கும் வெளிச்சத்தைத் தரும் சுகாதாரத் தொழில்நுட்ப விளக்குகளுக்கான தேவை உலகளவில் பெருகியுள்ளது.
சுகாதாரத் தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்குச் சிங்கப்பூர் ஒரு நடுவமாக இருப்பதால் எவர்குரோன் விளக்குகளை உள்ளூர்ப் பயனீட்டாளர் சந்தையில் அறிமுகம் செய்வது அவசியம் என்றார் திரு கோங்.
சிங்கப்பூரில் உள்ள பயனீட்டாளர் சந்தையில் கால் பதிப்பது உற்சாகம் அளிப்பதாகக் கூறிய எவர்குரோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நெல்சன் லிம், “மில்லியன்கணக்கான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் உள்ள குடியிருப்புச் சந்தையான சிங்கப்பூர் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்,” என்றார்.


