டென்பசார்: சுற்றுலாத் தலமான பாலித் தீவில் சேகரிக்கப்படாத குப்பைகள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
குப்பைகளை எரிப்பதும் ஆறுகள், சாலையோரங்கள், பொதுப் பூங்காக்கள், பள்ளிக் கூடப் பகுதிகள் ஆகிய இடங்களில் அவற்றை வீசிச் செல்வதும் அங்கு அதிகரித்து வருகிறது.
பாலியில், சாலையோரங்களில் குப்பைக் குவியல்கள் கிடப்பது ஒரு பொதுவான காட்சியாக மாறிவிட்டன. இதனால், சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படாததால், ஆறுகள் குப்பை கொட்டும் இடங்களாக மாறிவிட்டன.
டென்பசாரில் உள்ள தீவின் மிகப்பெரிய குப்பைக்கிடங்கான 32 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சுவுங், இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முற்றிலும் மூடப்பட உள்ளது.
அதற்கு முன்னதாக அங்குக் கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதைப் பின்பற்றி, சில மக்கள் தங்கள் வீட்டிலேயே அல்லது வீட்டிற்கு அருகிலுள்ள காலியிடங்களில் குப்பைகளை எரிக்க முடிவு செய்துள்ளனர்.
டென்பசார் நகரத்தின் குப்பைகள் மட்டுமல்லாமல், படுங், கியான்யார், தபனான் ஆகிய பகுதிகளில் இருந்தும் குப்பைகள் சுவுங் குப்பைக்கிடங்கிற்கே கொண்டு வரப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“எனது வீட்டைச் சுற்றியுள்ள மக்கள் பலர், தொடர்ந்து குப்பைகளை எரிக்கின்றனர். அதனால் காற்று முழுவதும் மாசு அடைவதோடு, நெகிழி எரியும் துர்நாற்றமும் வீசுகிறது. அது மிகவும் கவலையளிக்கிறது,” என டென்பசாரில் வசிக்கும் 35 வயது தியாஸ் ஆர்டி தெரிவித்தார்.
மேலும், தனது வீட்டிற்கு அருகில் எங்கும் புகை சூழ்ந்துள்ளதால், அண்மை காலமாக இருமலால் பாதிக்கப்பட்டுள்ள தமது பிள்ளையை நினைத்து கவலையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காற்று சுத்திகரிப்பான் ஒன்றை அவர் வாங்கி இருப்பதாகவும் சன்னல்களைத் திறக்கும் போதெல்லாம் அது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் சன்னலைத் திறந்தவுடன், அந்தக் கருவியின் திரையில் உள்ள குறியீடு பச்சை நிறத்திலிருந்து உடனடியாக மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடுவதாக அவர் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

