தோக்கியோ: வெளிநாட்டுக் குடியேறிகளை வரவேற்பதில் ஜப்பானில் நிலவும் எதிர்ப்பு மனநிலை பலரிடம் வளர்ந்துவருவதாக இவ்வாண்டு நடந்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2024ல் அவ்வாறான போக்கை வெளிப்படுத்தியோரின் விழுக்காட்டைவிட 2026ல் நடந்த ஆய்வில் 56.3 விழுக்காட்டினர் அதே கருத்தை வெளியிட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைவிட 20.7 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது என ஆய்வை வழிநடத்திய தோக்கியோ பல்கலைக்கழகம் விவரங்களைப் பதிவிட்டுள்ளது.
குறிப்பாக இளைய தலைமுறையினரே அந்த மனநிலையைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. “ஜப்பானிய சமுதாயத்துக்கு இனி வாய்ப்பில்லை” என்ற எண்ணம் கொண்டுள்ள இளைஞர்கள் அவ்வாறு நினைக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சமூகத்தின்மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியினாலும் வெளிநாட்டுக் குடியேறிகள் குறித்த எதிர்மறைக் கருத்துகளை எதிர்கொள்வதாலும் பதற்றமடைந்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்,” என்று சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷின் அரிட்டா கருத்துரைத்தார்.
வாழ்க்கை முறையில் பருவங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து அதே ஆய்வில் பங்கேற்ற ஏறத்தாழ 3,800 நபர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
வெளிநாட்டுக் குடியேறிகளை ஏற்றுக்கொள்வது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வில் கேள்விகள் கேட்கப்படும். இவ்வாண்டு வெளிநாட்டினரை ஏற்றுக்கொள்வோர் 9.4 விழுக்காட்டு மக்களே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது 2024ஆம் ஆண்டைவிட 8.4 விழுக்காடு குறைவாகும்.
ஜப்பானில் வெளிநாட்டினரை ஏற்காதோர் பெரும்பாலும் 1987 முதல் 1998 வரையிலான ஆண்டுகளில் பிறந்தவர்கள் எனவும் வெளிநாட்டினரை ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையோர் 1966 முதல் 1976 ஆம் ஆண்டுகளில் பிறந்தோர்கள் எனவும் ஆய்வில் புள்ளிவிவரங்கள் காட்டின.


