ஹாங்காங்: எமிரேட்ஸ், எட்டிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனங்கள், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் விமான நிலையங்களிலிருந்து முக்கிய உலக நகரங்களுக்குக் குறைந்த எண்ணிக்கையில் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குகின்றன.
தற்போது நடக்கும் போர்த் தாக்குதல்களால் விமான நிறுவனங்கள் தொடர்ந்து நெருக்கடியை எதிர்நோக்கிவரும் நிலையிலும் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் சண்டைகள் தொடங்கியதிலிருந்து, ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், மத்திய கிழக்கில் பெரும்பாலான வான்வழிகள் மூடப்பட்டுள்ளன.
குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் வர்த்தக விமானச் சேவைகள், தனியார் விமானச் சேவைகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.
அரசாங்க ஏற்பாட்டிலான ‘ஏர் ஃபிரான்ஸ்’ விமானம் ஒன்று ஐக்கிய அரபுச் சிற்றரசிலிருந்து பிரெஞ்சு நாட்டினரை திரும்ப அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தபோது, அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் வியாழக்கிழமையன்று (மார்ச் 5) விமானம் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிரெஞ்சுப் போக்குவரத்து அமைச்சர் ஃபிலிப் தபாரொட் கூறினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 19 வரை குறைந்த எண்ணிக்கையில் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ‘எட்டிஹாட்’ கூறியுள்ளது.
லண்டன், பாரிஸ், ஃபிராங்க்ஃபர்ட், டெல்லி, நியூயார்க், டொரொன்டோ உள்ளிட்ட 25 இடங்களுக்கும் அபுதாபிக்கும் இடையே விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.
வியாழக்கிழமை நிலவரப்படி, துபாய் விமான நிலையத்தில் போக்குவரத்து அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரட்டிப்பானது. இருப்பினும், வழக்கமான நிலைகளுடன் ஒப்பிடும்போது அது 25 விழுக்காடு மட்டுமே என்று விமானக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபிளைட்ரேடார்24’ தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், எமிரேட்ஸ் விமான நிறுவனம் லண்டன், சிட்னி, சிங்கப்பூர் உள்ளிட்ட 82 இடங்களுக்கு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியிருப்பதாகக் கூறியுள்ளது.

