லண்டன்: வளைகுடா வட்டாரத்தில் பெரிய அளவில் இருக்கும் எண்ணெய்க் கசிவு உலகின் ஆக மோசமான எண்ணெய்க் கசிவுச் சம்பவங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது என்று அனைத்துலக அமைப்புகள், சுற்றுச்சூழல் குழுக்கள் போன்றவை எச்சரித்துள்ளன.
பல வாரங்களாக எண்ணெய்க் கசிவைக் கவனிக்காமல் இருந்ததே மோசமடைந்ததற்கான காரணம் என்று அவை கூறுகின்றன.
ரஷ்ய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பல், ஓமான் கடற்கரைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கசிந்த எண்ணெய் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) கரைக்கு வந்துவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) கப்பல்துறை அமைப்பு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
அந்த எண்ணெய்க் கசிவு தற்போது 2,000க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருப்பதாக எண்ணெய்க் கசிவு தொடர்பான வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த எண்ணெய்க் கசிவு பதிவான செயற்கைக்கோள் படங்கள் பார்வையிடப்பட்டு அத்தகவல் வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட கேரலின் பெஸெங்கி என்ற கப்பல் கிட்டத்தட்ட 800,000 பீப்பாய் அளவிலான ரஷ்ய எண்ணெய்யை ஏற்றிச் சென்றதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகத் தடை உத்தரவுகளுக்கு உட்பட்ட அது கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஓமானின் தீவு ஒன்றில் சிக்கிக்கொண்டது.
முதலில் ஜூன் 8ஆம் தேதி ஏமனுக்கு அருகே சிக்கல்களை எதிர்நோக்கியதாக அக்கப்பல் தெரிவித்தது. அதில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் தெரிந்த கடல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்மீது தாக்குதல் நடத்தியதாக எந்தத் தரப்பும் கூறவில்லை. ஆனால், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்த அக்கப்பல் இரண்டு போர்களுக்கு மத்தியில் பயணம் செய்துகொண்டிருந்தது.


