சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் திட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் அறிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகரான சிட்னியில் யூதத் திருவிழா ஒன்றில் 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
சிட்னியிலுள்ள போண்டாய்க் கடற்கரையில் 2025 டிசம்பர் 14ஆம் தேதி ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது அந்தத் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளைத் திரும்பப் பெறுதல், துப்பாக்கி உரிமங்களுக்கான கடுமையான பரிசோதனைகள், வெறுப்புணர்விற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான சட்டங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் இயற்றியது.
போண்டாய்க் கடற்கரைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டபூர்வமாகப் பெறப்பட்ட, ஆற்றல்மிக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சாதனை அளவாக 4.1 மில்லியன் துப்பாக்கிகள் இருந்ததாக அந்நாட்டு அரசு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள், அதிக மக்கள்தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டுமே உள்ளன.
துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என்றும், துப்பாக்கிகளையும் கைத்துப்பாக்கிகளையும் திருப்பித் தருபவர்களுக்குத் துப்பாக்கி ஒன்றுக்கு 1,000 ஆஸ்திரேலிய டாலர் (S$905.6) வரை இழப்பீடு பெற தகுதி உண்டு என்றும் பிரதமர் அல்பனிசும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்சும் ஒரு கூட்டறிக்கைமூலம் தெரிவித்துள்ளனர்.


