சிபு: பிலிப்பீன்சில் சிபு நகரில் 14 வயது மாணவர் ஒருவரின் பள்ளிப் பையிலிருந்து 357 கேலிபர் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாதம் 20ஆம் தேதி நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது மாணவரின் பையில் துப்பாக்கி இருந்ததைப் பிற்பகல் 3.50 மணியளவில் ஆசிரியர் ஒருவர் கண்டெடுத்தார்.
அதையடுத்து பள்ளி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியது.
சிபு நகரின் பினமுங்கஜான் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்துக்குச் சென்ற அதிகாரிகள், தோட்டா இல்லாத 357 ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் மெக்னம் துப்பாக்கியைக் கைப்பற்றினர்.
கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி மாணவரின் தாத்தாவுக்குச் சொந்தமானது என்றும் வீட்டிலிருந்த அலமாரியில் அது வைக்கப்பட்டிருந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மாணவர் அந்தத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பள்ளிக்கு வந்துள்ளார்.
நகராட்சிக்குப் புறம்பான பகுதியில் மாணவரின் பெற்றோர் வேலை செய்துகொண்டிருப்பதால் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் அந்த மாணவன் இருந்ததை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
துப்பாக்கியுடன் இருந்த மாணவர் பின்னர் நகராட்சியின் சமூகநல, மேம்பாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.
பிலிப்பீன்சின் தென்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இம்மாதம் 18ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் மாணவர்.
அதையடுத்து அங்குள்ள பள்ளிக்கூடங்கள் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், துப்பாக்கியையும் கைத்துப்பாக்கியையும் பயன்படுத்திச் சுட்டதில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர் தன்னைத்தானே சுட்டு, உயிரை மாய்த்துக்கொண்டார். சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்ப அவர் தனது உடலில் படக்கருவி ஒன்றைப் பொருத்தியிருந்ததும் தெரியவந்தது.
தற்போது அங்கு வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வேறு எந்த உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என்றும் பல்கலைக்கழகத் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஒரு அதிகாரி என்ற திட்டத்தை சிபு காவல்துறை மாநில அலுவலகம் அமல்படுத்தியுள்ளது.


