கஸுனோ: கரடிகளைக் கொல்ல காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியைப் பயன்படுத்தும் வகையில் ஜப்பானிய காவல்துறை நிர்வாகம் தனது விதிகளை வியாழக்கிழமை (நவம்பர் 6) திருத்தி உள்ளது.
பொதுமக்களைக் கரடிகள் தாக்கும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விதிகள் நவம்பர் 13 முதல் நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காவல்துறை அதிகாரிகள் இதுவரை குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
கடத்தல் போன்ற மிகவும் கடுமையான சம்பவங்களின்போது காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுடலாம். இதர சம்பவங்களில் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை.
ஜப்பானின் இவாட், அகிதா என்னும் இரு மாகாணங்களில்தான் கரடிகளின் தாக்குதல் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.
அந்த மாகாணங்களின் நகர்ப்புற வட்டாரங்களில் கரடிகள் தோன்றினால் அவற்றைச் சுட்டுக்கொல்ல அடுத்த வாரம் முதல் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
அவசரகால துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளூர் நிர்வாகம் அனுமதி வழங்கப் போதுமான கால அவகாசம் இல்லாதபோது காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தலாம் என்கிறது திருத்தப்பட்ட விதி.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி வரை கரடிகளால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 13 ஆகப் பதிவானது.
இதுவரை ஜப்பானில் கரடிகள் தாக்கி இந்த அளவுக்கு மரணம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

