கியவ்: உக்ரேனும் ரஷ்யாவும் ஒன்று மற்றதன்மீது தொடுத்துள்ள பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அன்டோனியோ குட்டரஸ், குடிமக்கள் உள்ள பகுதிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பகுதியிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸ்லென்ஸ்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) கூறினார்.
உக்ரேனும் ரஷ்யாவும் அண்மைய மாதங்களில் அவற்றின் தொலைதூரத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்திவருகின்றன. அதன் விளைவாகக் குடிமக்களின் மரணங்கள் அதிகரித்தன.
உக்ரேன் இதுவரை இல்லாத அளவிலான ஏவுகணைகளை ரஷ்யாமீது பாய்ச்சிவரும் நிலையில் ரஷ்யாவும் உக்ரேன்மீதான ஏவுகணைத் தாக்குல்தல்களை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரேனில் குறைந்தது 17 பேர் மாண்டதுடன் சில்லறை வர்த்தகர்களுக்குச் சொந்தமான கிடங்குகள் அழிந்தன.
இதற்கிடையே, இருநாடுகளில் உள்ள குடிமக்களின் பகுதிகள்மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் குட்டரஸ் கேட்டுக்கொண்டார்.
குடிமக்களின் பகுதிகள்மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. தலைவர் கண்டனம்
குடிமக்கள்மீதும் அவர்களின் உள்கட்டமைப்புகள்மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்துலக மனிதநேய சட்டத்தை மீறும் செயல் என்று வலியுறுத்திய அவர், உடனடியாக அவற்றை நிறுத்தும்படி கூறினார்.
வடகிழக்குக் கார்கிவ் வட்டாரத்தில் உள்ள லொசோவா ரயில் நிலையத்தில் ரஷ்யா தொடுத்த தாக்குதலில் இருவர் மாண்டனர். கருங்கடல் வழியாக உக்ரேனின் கோதுமையைக் கொண்டுசென்ற வர்த்தகக் கப்பல்மீதும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் மாண்டார்.
நான்கு ஆண்டுகளுக்குமுன் ரஷ்யா மிகப் பெரிய அளவில் உக்ரேனை ஆக்கிரமித்தது. அதையடுத்து இருதரப்பு அரசந்தந்திர உறவுகள் நிலைகுத்தியதோடு ஒன்று மற்றதன்மீதான தொலைதூரத் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.


