ஹைட்டி மலையுச்சி கோட்டையில் நெரிசல்: 30பேர் மிதிபட்டு மாண்டனர்

ஹைட்டி மலையுச்சி கோட்டையில் நெரிசல்: 30பேர் மிதிபட்டு மாண்டனர்

2 mins read
சில ஆண்டுகளாக நிலநடுக்கம், எரிவாயுக் கிடங்கு வெடிப்பு என அத்தீவில் பேரிடர்கள் நடந்து அவற்றில் பலர் பலியாகினர்
41a0d878-4fdf-4672-943e-1393c08f598b
யுனெஸ்கோ உலக மரபுடைமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டதை ஆண்டுதோறும் கொண்டாடும் விழாவில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) பலர் கலந்துகொண்டனர். - படம்: கூகிள் வரைபடங்கள்
Google News Preferred Icon

போர்ட்-அவ்-பிரின்ஸ்: ஹைட்டித் தீவின் வடக்குப்பகுதி கிராமத்தில் உள்ள ‘லப்ஃபெரியர்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் சனிக்கிழமை (ஏப்ரல்11) நடந்த கூட்ட நெரிசலில் மிதிபட்டு 30பேர் மாண்டனர்.

அந்தக் கோட்டை 2,990 அடி உயர மலையின் உச்சியில் உள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுடைமைச் சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டதை மக்கள் ஆண்டுதோறும் பெருந்திரளாகக் கொண்டாடும் நிகழ்வில் அந்தச் சம்பவம் நடந்தது. மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்சிடம் இருந்து அத்தீவு சுதந்திரம் பெற்ற சிறிது காலத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்தக் கோட்டை கட்டப்பட்டது.

ஹைட்டி தீவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான அந்தக் கோட்டையில் மாணவர்களும் வருகையாளர்களும் திரண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டது என்று அந்நாட்டு பொதுபாதுகாப்புத் துறையின் தலைவர் ஜின் ஹென்ரி பெடிட் கூறினார்.

பிரதமர் அலிக்ஸ் டிடியே ஃபில்ஸ் அய்ம் அவரது ஆழ்ந்த அனுதாபங்களை மறைந்தோர் குடும்பங்களுக்குத் தெரிவித்துக்கொண்டார். அவர்களுடன் அவர் துணை நிற்பதாகவும் ஆறுதல் கூறினார்.

இன்னும் அடையாளம் காணப்படாத பல இளைஞர்கள் பலியானதை அவர் குறிப்பிட்டார்.

கோட்டையின் வாசலில் அந்த சம்பவம் நடந்ததாகவும் அப்போது பெய்த மழை நிலைமையை இன்னும் மோசமாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் ஹைட்டியில் குற்றக்கும்பல்கள் பொதுமக்களை கண்மூடித்தனமாகக் கொலை செய்து வருவதை எதிர்த்துக் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில ஆண்டுகளாக அங்கு பல பேரிடர்களும் நடந்துள்ளன. 2024ஆம் ஆண்டிலும் 2021ஆம் ஆண்டிலும் எரிவாயுக் கிடங்கு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே 2021ஆம் ஆண்டில் நடந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்