காஸா சிட்டி: கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காஸா பகுதியை ஆண்டு வந்த ஆட்சி அமைப்பைக் கலைத்துவிட்டதாக பாலஸ்தீன இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ், திங்கட்கிழமை (ஜூலை 6) அறிவித்தது. இதன் மூலம், ஒரு நிபுணத்துவக் குழு மக்கள் ஆட்சியை அமல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, 2007ல் அதன் போராளிகள் போட்டியாளரான பாலஸ்தீன இயக்கமான ஃபத்தாவிடமிருந்து காஸாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, ஹமாஸ், காசாவை ஆண்டு வருகிறது. இந்த நடவடிக்கை, ஹமாசின் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.
2025 அக்டோபரில் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அது முதல் அன்றாட நிர்வாகத்திலிருந்து விலகிக்கொள்ளத் தயாராக இருப்பதாக அந்த அமைப்பு பலமுறை கூறிவந்தாலும், அதன் ஆயுதக் களைவு குறித்த சிக்கலான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
“அரசாங்கத்தின் அவசரகாலக் குழுவின் தலைவர் முகமது அல்-ஃபர்ரா, தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்,” என்று ஹமாசின் அரசாங்க ஊடக அலுவலகத் தலைவர் இஸ்மாயில் அல்-தவாப்தா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காஸா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிற்கு நிர்வாக மற்றும் அரசாங்க ரீதியான மாற்றத்தை எளிதாக்கும் பொருட்டு, அந்தக் குழுவைக் கலைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2025ஆம் ஆண்டு அக்டோபரில் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தத்திற்கு சமரசம் செய்தபோது நிறுவிய அமைதிக் குழுவால் காஸா நிர்வாகத்திற்கான தேசியக் குழு உருவாக்கப்பட்டது.
“தொடர்ந்து நடைபெற்று வரும் தனது ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்புப் போருக்கான எந்தவொரு சாக்குப்போக்கையும் அகற்றும் பொருட்டு, காஸா பகுதியின் பொறுப்பை இனி ஏற்காது என்ற புதிய நடவடிக்கையை ஹமாஸ் எடுத்துள்ளது,” என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹசிம் காசிம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

