ஜெருசலம்: பாலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த 63 வயது முஸ்தபா முகமது அபு அரா மாண்டதாக பாலஸ்தீன அரசாங்க அமைப்பு வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 26) கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
தெற்கு இஸ்ரேலில் இருக்கும் ரேமன் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மோசமடையவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாலஸ்தீன கைதிகள் விவகார ஆணையம் கூறியது.
அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் அது சொன்னது.
“கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அபு அரா கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து அனைத்து கைதிகளையும் போலவே கடுமையான துன்புறுத்தலுக்கு அவர் ஆளானார்,” எனப் பாலஸ்தீன அமைப்புத் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவரைத் துன்புறுத்தியதாகப் பாலஸ்தீன அமைப்பு இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸா போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 18 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியத் தடுப்புக் காவலில் இருந்தபோது இறந்தனர் எனப் பாலஸ்தீனக் கைதிகள் சங்கம் ஜூன் மாதம் தெரிவித்தது.
ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 250க்கும் மேற்பட்டவர்களைப் பிணை கைதிகளாகப் பிடித்துச் சென்றனர் என்றும் இஸ்ரேலியத் தரப்பு தெரிவிக்கின்றது.
அவர்களில், 120 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துவிட்டதாக நம்புவதாகவும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸாவில் வசித்த கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் இந்தப் போரால் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இது காஸாவின் பெரும்பாலான பகுதிகளை அழித்த பேரழிவு என்றும் அவர்கள் கூறினர்.

