ஹனோயில் விமான விபத்து; கூடுதல் பாதுகாப்புக்கு வலியுறுத்து

1 mins read
a1b8f464-ba05-49d0-a6b1-01dc24869d53
இரு வியட்னாம் ஏர்லைன்ஸ் விமானங்கள் அண்மையில் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹனோய்: பலர் அதிகமாகப் பயணம் மேற்கொள்ளும் கோடைக்காலத்தில் கூடுதல் விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வியட்னாமின் பொது விமானத்துறை ஆணையம் (சிஏஏவி) நாடு முழுவதும் உள்ள விமானத்துறை அமைப்புகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை உட்பட மோசமான வானிலை ஏற்படக்கூடியதைக் கருத்தில்கொண்டு அந்நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் இரு வியட்னாம் ஏர்லைன்ஸ் விமானங்கள் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஹோ சி மின் சிட்டி நகருக்குப் புறப்படவிருந்த போயிங் 787 வகை விமானம் தியென் பியென் சிட்டி நகருக்குப் புறப்படவிருந்த ஏர்பஸ் 321 வகை விமானத்தின் பின்புறத்தில் மோதியது. அச்சம்பவம் தலைநகர் ஹனோயின் நொய் பா அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதைப் பகுதியில் நிகழ்ந்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. மோதலில் ஈடுபட்ட இரு விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நான்கு விமானிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிஏஏவியின் உத்தரவின்படி விமான நிறுவனங்கள், விமானத்துறை அமைப்புகள் தங்கள் ஊழியர்களிடையே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நடப்பில் இருக்கும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு செயல்படுமாறு விமானிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்