அமெரிக்க, பிரெஞ்சு நாட்டவர் இருவருக்கு ‘ஹன்டா’ கிருமித்தொற்று

அமெரிக்க, பிரெஞ்சு நாட்டவர் இருவருக்கு ‘ஹன்டா’ கிருமித்தொற்று

1 mins read
238c345c-556c-4fa0-9399-063f029bdc74
நெதர்லாந்து கொடியுடன் ‘எம்வி ஹோண்டியஸ்’ உல்லாசக் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவுக்குப் புறப்படும் விமானத்தில் ஏறும் பயணிகள். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ‘ஹன்டா’ கிருமித்தொற்று பரவிய உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, பின்னர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய அமெரிக்க, பிரெஞ்சு நாட்டவர்கள் இருவருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பியவர்களுக்கான சிறப்பு விமானத்தில் சென்ற மற்றோர் அமெரிக்கருக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்கச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு பயணிகளுமே பிரத்தியேக உயிரியல் பாதுகாப்புக் கவசங்களில் அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரான்சில் ஒரு பெண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் ஸ்டெபனி ரிஸ்ட் கூறினார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 22 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள ‘எம்வி ஹோண்டியஸ்’ கப்பலில் இருந்த 90க்கும் மேற்பட்ட பயணிகள் தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தக் கப்பலில் பயணம் செய்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர், ஜெர்மானியப் பெண் என மூவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர். அவர்களில் இருவருக்கு கிருமித்தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுஉல்லாசக் கப்பல்கிருமி