தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோன்புப் பெருநாள் விற்பனை; சிங்கப்பூரர்களை வரவேற்கும் ஜோகூர்

2 mins read
0eb283ef-e15b-49e7-9433-9d7d0c2eda48
ஜோகூரெங்கும் 400க்கும் அதிகமான நோன்புப் பெருநாள் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. - படம்: பெரித்தா ஹரியான்

ஜோகூர் பாரு: நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களை வாங்க வரும் மார்ச் மாதப் பள்ளி விடுமுறையின்போது சிங்கப்பூரிலிருந்து பலர் ஜோகூருக்கு வருவர் என்று அம்மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறை எதிர்பார்க்கிறது.

புத்தாடைகள், அலங்காரப் பொருள்கள், பலகாரங்கள் போன்ற நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களை ஜோகூரில் உள்ள கடைகளிலிருந்து வாங்க சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை ஜோகூர் மாநிலம் வரவேற்கிறது.

2024ஆம் ஆண்டில் 22 மில்லியன் வெளிநாட்டினர் ஜோகூருக்குப் பயணம் மேற்கொண்டதாக ஜோகூர் சுற்றுப்பயணத்துறை இயக்குநர் ஷாரில் நிசாம் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள் என்றார் அவர்.

2024ஆம் ஆண்டில் 17 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஜோகூருக்குப் பயணம் மேற்கொண்டதாகத் திரு ஷாரில் நிசாம் கூறினார்.

2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 13 மில்லியனாக இருந்தது என்றார் அவர்.

“ரமலான் மாதத்தின் இரண்டாவது வாரமாகிவிட்டது. ஜோகூருக்கு சிங்கப்பூரர்கள் பலர் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, நோன்புப் பெருநாள் கொண்டாடும் பலர் ஜோகூருக்கு வருவர். நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பொருள்களை அவர்கள் ஜோகூரில் உள்ள கடைகளிலிருந்து வாங்குவர்.

“ஜோகூரில் உள்ள நோன்புப் பெருநாள் சந்தைகள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகூர் பாருவில் உள்ள அங்சானா கடைத்தொகுதிக்கு சிங்கப்பூரர்கள் பலர் செலதாகத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு பலர் நோன்புப் பெருநாள் பலகாரங்கள் வாங்குவது வழக்கம்,” என்று திரு ஷாரில் நிசாம் தெரிவித்தார்.

ஜோகூரெங்கும் 400க்கும் அதிகமான நோன்புப் பெருநாள் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்தைகள் உள்ளூர் மக்களையும் சிங்கப்பூரர்களை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் வரை ஜோகூரில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு ஷாரில் நிசாம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்