தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீமை ஏற்படுத்தக்கூடிய இணையப் பதிவுகள்: சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் மலேசியா

1 mins read
ee813d9b-4785-4dca-8698-a4ebf545bb1d
கோப்புப் படம்: - இணையம்

கோலாலம்பூர்: இணையத்துக்கான சட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டுவர மலேசியா பரிந்துரைத்துள்ளது.

அவற்றின்கீழ், தீமை ஏற்படுத்தக்கூடியவை என்று வகைப்படுத்தப்படும் இணையப் பதிவுகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம், அபராதத் தொகை உயர்த்தப்படலாம். குறிப்பாக சமூக ஊடகங்கள், குறுந்தகவல் அனுப்பப் பயன்படுத்தப்படும் செயலிகள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும்.

அந்த வகையில், மலேசியாவில் உள்ள மெட்டா, எக்ஸ், கூகல் ஆகியவற்றைப் பிரதிநிதிப்போர் கைதாணை இல்லாமல் கைது செய்யப்படலாம், அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மோசடிகள், இணைய சூதாட்டம், பகடிவதை, ஆபாசப் படங்கள் (குறிப்பாக சட்டபூர்வ வயதை அடையாதோர் இடம்பெறும் ஆபாசப் படங்கள்) ஆகியவற்றைத் தடுக்க மலேசியா இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட தளங்களை வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்ச்சைக்குரிய உரிம முறைக்கு உட்படுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மலேசியாவில் சுமார் எட்டு மில்லியன் பேர் அத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஜனவரி நடப்புக்கு வரவுள்ள உரிம முறைப்படி மலேசியாவின் தொடர்பு, பல்லூடகச் சட்டத்துக்குக்கீழ் (Communications and Multimedia Act - சிஎம்ஏ) இழைக்கப்படும் குற்றங்களின் தொடர்பிலான தகவல்களை அதிகாரிகள் பெற சட்டத்தில் செய்யப்படக்கூடிய மாற்றங்கள் வகைசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்