தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனத்தைப் பெற்றார் கமலா ஹாரிஸ்

2 mins read
d47d949f-408e-4125-8488-2d5b84fd1e50
திருவாட்டி ஹாரிஸ், 59, வாக்களித்த 4,567 பேராளர்களில் 99 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றார். - படம்: இணையம்

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனத்தைப் பெற்றுள்ளார்.

அதன் மூலம், முக்கியக் கட்சி ஒன்றின் நியமனத்தை வென்றிருக்கும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக அவர் அதிகாரபூர்வமாகப் போட்டியிட ஆயத்தமாகிறார்.

திருவாட்டி ஹாரிஸ், 59, வாக்களித்த 4,567 பேராளர்களில் 99 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றதாக ஜனநாயக தேசியக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சட்டரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க, ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் நேரடியாக நடத்துவதற்குப் பதிலாக, வாக்குப்பதிவு மெய்நிகர் வழியாக ஐந்து நாள்கள் நடத்தப்பட்டது

திருவாட்டி ஹாரிசும், விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் துணை அதிபர் வேட்பாளரும் நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், மாநாட்டின் செயலாளர் ஜேசன் ரே வாக்குப்பதிவின் முடிவுகளை உறுதிப்படுத்தவேண்டும்.

திருவாட்டி ஹாரிசின் தாயார் இந்தியாவிலிருந்து வந்த குடியேறி. அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

வெற்றிபெற்றால், அதிபராகப் பதவியேற்கும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்ணும், முதல் கறுப்பினப் பெண்ணாகவும் அவர் இருப்பார்.  

அதிபர் ஜோ பைடன் அதிபர் போட்டியிலிருந்து ஜூலை 21ஆம் தேதி விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முன்னணி நிலைக்குச் சென்றார் திருவாட்டி ஹாரிஸ்.

அப்போதிலிருந்து, ஜனநாயகக் கட்சி அதன் புதிய வேட்பாளருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது.

திருவாட்டி ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கான தேடல் பணியை விரைவில் தொடங்கி, அவரது இயக்கத்திற்குப் புதிய ஆலோசகர்களைக் கொண்டுவந்தார்.

இதனிடையே, மெய்நிகர் வழியாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை தொடங்கியது. ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகலுக்குள், திருவாட்டி ஹாரிஸ், நியமனத்திற்குத் தேவையான பேராளர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவிட்டார்.

வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 6 மணி) நிறைவுபெற்றது.

ஜனநாயக் கட்சி, முடிவுகளை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்