முல்லைத்தீவு: ஆடவர் ஒருவரின் சர்ச்சைக்குரிய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது.
ராணுவ முகாமிற்குள் நுழைந்த கபில்ராஜ் என்ற 32 வயது ஆடவர் காணாமல் போன நிலையில், பின்னர் அவர் அருகிலிருந்த நீர்த்தொட்டியிலிருந்து பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
அதிபர் அனுர குமார திசாநாயக்கவிற்குத் தான் அனுப்பிய கடிதத்தில், வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிகப்படியான ராணுவத்தினர் இருப்பதையும் அவர்களின் அடக்குமுறையையும் அது குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அப்பகுதிகளில் உள்ள அதிகப்படியான ராணுவத்தினரை உடனே மீட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அது அதிபரை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
போராட்டத்தை அடுத்து பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, கபில்ராஜின் மரணத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
ஆயினும், ராணுவ வீரர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணை நடந்துவருவதை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ராணுவ முகாம்களில் இருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

