மசசூசெட்ஸ்: உலகில் மாணவர்கள் இடம் கிடைக்க மிகவும் சிரமப்படும் பல்கலைக்கழங்களில் ஹார்வர்ட் பல்கலையும் ஒன்று. ஆண்டுதோறும் அந்தப் பல்கலைக்கு விண்ணப்பிப்போரில் ஏறக்குறைய 97 விழுக்காட்டினர் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
ஆனால், படிக்க இடம் கிடைத்த பிறகோ நிலைமை வேறு. ஏராளமான மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்வதில்லை, வாசிப்பதில்லை என்று வகுப்பறைச் சமுதாய உடன்பாட்டுக் குழு கூறுகிறது. அந்தக் குழுவில் பல்கலையின் ஆசிரியர்கள் எழுவர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அதுகுறித்த விவாதம் சூடுபிடித்துவருகிறது.
வகுப்புக்குச் செல்லும் மாணவர்களோ பாடங்களைக் கவனிப்பதில்லை. மாறாக அவர்கள் சாதனங்களில் மூழ்கிவிடுகின்றனர். மாணவர்கள் பேசுவதும் குறைவு. தாங்கள் பகிரும் கருத்துகளை மற்றவர்கள் ஏற்கமாட்டார்களோ என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று அறிக்கை கூறியது. அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க அவர்கள் போதிய அளவு வாசிப்பதில்லை என்றும் அது சுட்டியது.
இருப்பினும் பாடங்களில் மிகச் சிறந்த தேர்ச்சி நிலைகளை அவர்கள் பெறுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
ஆசிரியர்களுடனோ சக மாணவர்களுடனோ அதிகம் பேசாமலேயே நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதை அது காட்டுகிறது. மாணவர்கள் தங்களின் சித்தாந்தங்களையே பற்றிக்கொள்கின்றனர். மற்றவர்களுடன் சவால்மிக்க சிந்தனைகளை முன்வைத்து அவர்களால் விவாதிக்க இயலவில்லை அல்லது அவர்கள் விரும்பவில்லை என்பதை அறிக்கை பிரதிபலிப்பதாகச் சொல்லப்பட்டது.
ஹார்வர்ட் உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிலையங்கள் மாணவர்களின் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் குறைகூறியுள்ளனர்.
வகுப்புகளுக்குச் செல்லாமல் இருப்பதால் மாணவர்கள் மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் வேறுபட்ட கருத்துகளையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை இழப்பதாக அறிக்கை சொன்னது.
2015ஆம் ஆண்டில் பல்கலையில் பயின்றோரில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் ‘ஏ’ (A) மதிப்பளவையைப் பெற்றனர். இப்போது அது கிட்டத்தட்ட 60 விழுக்காட்டை எட்டியிருப்பதாகப் பல்கலையின் இளநிலைப் பட்டக்கல்வித் துறைத் தலைவர் டாக்டர் அமெண்டா கிளேபா கூறினார். மாணவர்கள் தனித்துவமாய் விளங்கக் கூடுதல் சங்கங்களிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சேருவதாகவும் அவர் சொன்னார்.