ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கலிமந்தானிலும் சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், நாட்டின் முக்கிய நகரங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தப் புகைமூட்டம், எல்லை தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
தெற்கு கலிமந்தானில் நிலைமை மோசமடைந்ததால், பஞ்சார்மாசின் நகரில் உள்ள சியம்சுதின் நூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து புறப்படவேண்டிய ஆறு விமானங்கள் தாமதமாகக் கிளம்பின.
பார்க்கும் தொலைவு 100 மீட்டருக்குக்கீழ் குறைந்ததால் காலை 6 மணி முதல் 8.20 மணிக்குள் புறப்பட வேண்டிய விமானங்கள் பாதிக்கப்பட்டதாக விமான நிலையப் பேச்சாளர் கூறினார்.
அவற்றில் நான்கு விமானங்கள் ஜகார்த்தாவிற்கும் ஒன்று சுரபாயாவிற்கும் மற்றது பாலிக்பப்பானிற்கும் செல்ல வேண்டியவை.
மத்திய கலிமந்தான் தலைநகரான பாலங்கராயா நகரில் கடந்த சில நாள்களாகவே காற்றில் மாசு அதிகமாகியுள்ளது. பள்ளி மாணவர்களின் உடல்நலம் காக்கும் பொருட்டு அவர்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.
சுமத்ராவின் தென்கிழக்குப் பகுதியில், திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற நிலையை’ எட்டியது. சுற்றுவட்டாரத்தில் நிலவிய காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் அதற்குக் காரணம்.
இதனையடுத்து, இந்தோனீசியச் செஞ்சிலுவைச் சங்கம், உயிர்வாயுக் கலன்களைச் சேகரிக்கும் நிலையங்களை அமைத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜாம்பி கல்வித் துறை, நகரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் மூண்ட காட்டுத் தீயால் இந்தோனீசியாவில் ஏறத்தாழ 1.6 மில்லியன் ஹெக்டர் நிலம் பாதிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சிங்கப்பூர், புருணை, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்தோனீசியாவிற்கு மொத்தம் $7.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது.