பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) மூடப்பட்டிருக்கும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்டம் மோசமடைந்திருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட், பெட்டாலிங் பெர்டானா, கோலா லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களின் கல்வி அலுவலகங்களின்கீழ் செயல்படும் பள்ளிகளும் பாகாங் மாநிலத்தில் உள்ள குவந்தான், ரொம்பின் மாவட்ட கல்வி நிலையங்களின் பள்ளிகளும் மூடப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
தலைநகர் கோலாலம்பூர், கூட்டரசுப் பிரதேசமான லாபுவான், கெடா, கிளந்தான், பெர்லிஸ், பினாங்கு, பேராக், திரங்கானு, சாபா, சரவாக் ஆகிய இடங்களில் பள்ளிகள் வழக்கமான முறையில் இயங்கும்.
திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை 8 மணி நிலவரப்படி, மலேசியா முழுவதும் மொத்தம் 22 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 100க்கும் அதிகமாக ஆரோக்கியமற்ற அளவாகப் பதிவாகியுள்ளது.
இதில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி பகுதி 170 எனும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டுடன் நாட்டிலேயே மிகவும் மோசமான காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளது.
சுற்றுப்புறத் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு மேலாண்மை அமைப்பு இணையத்தளத்தில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜோகூர் மாநிலத்தில் பாசிர் கூடாங் (168), பெங்காராங்(164), லார்க்கின் (160), தங்காக் (156), பத்து பாகாட் (152), குளுவாங் (152) மற்றும் சிகாமாட் (129) ஆகிய மேலும் ஏழு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிரம்பான் (164), நீலாய் (163) மற்றும் போர்ட் டிக்சன் (137) ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவானது.
பாகாங் மாநிலத்தில் பாலோக் பாரு குவந்தான் (162), ரோம்பின் (157), இந்திரா மகோத்தா குவந்தான் (142) ஆகிய மூன்று இடங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.
திரெங்கானு மாநிலத்தில் கெமாமான் (157), பாக்கா (156) மற்றும் கோலா திரெங்கானு (154) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில், மலாக்காவில் புக்கிட் ரம்பாய் (153), அலோர் காஜா (101) ஆகிய இரண்டு பகுதிகளிலும், சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா (129) பகுதியில் மட்டும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவானது.
புத்ராஜெயாவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 146 ஆகவும் கோலாலம்பூரின் செராஸ் கண்காணிப்பு நிலையத்தில் 123 ஆகவும் இருந்தது.
மலேசியாவில் 42 பகுதிகள் மிதமான காற்றுத் தரத்தையும் பினாங்கின் பாலிக் புலாவ் (44), பெர்லிசின் கங்கார் (41),கெடாவின் லங்காவி (27) என மூன்று கண்காணிப்பு நிலையங்கள் நல்ல காற்றுத் தரத்தையும் பதிவு செய்துள்ளன.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல காற்றுத் தரம், 51 முதல் 100 வரை மிதமான நிலை, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை, 201 முதல் 300 வரை மிக ஆரோக்கியமற்ற நிலை, 300க்கு மேல் இருந்தால் அது அபாயகரமான நிலை என வகைப்படுத்தப்படுகிறது. இந்தத் தரவுகள் மலேசியா முழுவதிலும் உள்ள 68 கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்டு மணிநேர அடிப்படையில் வெளியிடப்படுகின்றன.
