புத்ராஜெயா: மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலவிவரும் புகைமூட்டம் காரணமாக, வரும் வார இறுதியில் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்களின் அளவைக் குறைத்தல் அல்லது நிகழ்வுகளை உள்ளரங்கிற்கு மாற்றுவது என்பது குறித்து மலேசிய அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று மலேசியத் தொடர்புதுறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக, வானிலை முன்னறிவிப்புகளை மதிப்பிட்டு, தேவையான நடவடிக்கைகளைத் தீர்மானிக்க அரசாங்கத் தலைமைச் செயலாளர் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) மாலை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமைச்சர் ஃபாஹ்மி தெரிவித்தார்.
“அரசாங்கத் தலைமைச் செயலாளர், தொடர்பு அமைச்சு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு, மலேசிய வானிலை ஆய்வுத் துறை, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுப்பார்,” என்றும் அவர் கூறினார்.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1,500 உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மனித வரைகலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
இருப்பினும், தேசிய தினக் கொண்டாட்டங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட மாட்டா என்று கூறிய அமைச்சர் ஃபாஹ்மி, நிகழ்வுகள் உள்ளரங்கிற்கு மாற்றப்படலாம் என்று தெரிவித்தார்.


