ஜோகூர் பாரு: புகைமூட்டம் காரணமாக மலேசியாவின் ஜோகூர் மாநிலக் கல்வி நிலையங்கள் அக்டோபர் 16ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் என்று மாநிலக் கல்வி, தகவல் குழுத் தலைவர் முகம்மது நகிப் முகம்மது கஸாலி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அக்டோபர் 8, 9ஆம் தேதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடப்பு வானிலை, காற்றுத்தரம், உடல்நலக் கோளாறு அபாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவ்விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது என்று திரு முகம்மது நகிப் விளக்கினார்.
நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்குமுன் மாணவர்களுக்குப் பாதுகாப்பான, உகந்த கற்றல் சூழலை உறுதிசெய்வதும் இதன் நோக்கம் என்று சனிக்கிழமை (அக்டோபர் 10) ஓர் அறிக்கைமூலம் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதி வரை கலிமந்தானிலிருந்து வீசும் காற்று, எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டை ஜோகூருக்குக் கொண்டுவரக்கூடும் என்ற முன்னறிவிப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
“காற்று மெதுவாக வீசுவதும் காற்று மாசுபடுத்திகள் பரவாமல் தடுக்கக்கூடும். அதனால், புகைமூட்டம் நீடிக்கக்கூடும். வளிமண்டலத்தில் நுண்துகள்கள் திரள்வதும் மக்களின், குறிப்பாக மாணவர்கள், எளிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கக்கூடும்,” என்று திரு முகம்மது நகிப் கூறினார்.
குழந்தைகள், மாணவர்கள், கல்வித் துறையைச் சார்ந்தோர் ஆகியோர்க்கு ஏற்பட வாய்ப்புள்ள மூச்சுப் பிரச்சினைகளையும் சுகாதார அறிக்கைகளையும் மாநிலக் கல்வித்துறை கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் திரு முகம்மது நகிப் சுட்டினார்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள காலத்தில் நடப்பதாக இருந்த தேர்வுத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு, மறுதேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் வீட்டிலிருந்தபடியே கற்பதும் கற்பிப்பதும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாநில அரசு காற்றுத்தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அதிகாரத்துவ வழிகளில் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடும் என்றும் திரு முகம்மது நகிப் சொன்னார்.
இதற்கிடையே, காற்றுத்தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பாகாங், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்களில் பள்ளிகள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதுபோல, புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரின் செந்துல், கெராமத் மாவட்டங்களிலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
