பெட்டாலிங் ஜெயா: கடுமையான புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்யும் அல்லது தள்ளி வைக்கும் நிலைமை அவற்றின் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற இருந்த பிஜே மாரத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதேவேளை, அன்றைய தினம் நண்பகலில் காற்றின் மாசுக் குறியீடு 169ஐ எட்டியதால் சிலாங்கூரில் நடைபெற இருந்த திடல்தடம், நீச்சல், வில்வித்தை உள்ளிட்ட நான்கு விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. உடற்குறையுள்ளோருக்கான போட்டிகள் அவை.
அதேபோல கூச்சிங்கில் நடைபெற இருந்த ஓட்டப் பந்தயம் செப்டம்பர் 6ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருதியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் போட்டி ரத்து செய்யப்பட்டால் நுழைவுக் கட்டணம் பொதுவாகத் திருப்பித் தரப்படாது என்று போட்டியின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிஜே மாரத்தான் அமைப்பாளர் கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டதை அறிவித்தார்.
புகைமூட்டம் மோசமடைந்தபோதிலும், கோலாலம்பூரில் சில போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெற்றன.


