தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் காற்றுத்தரம் மேம்பட்டுள்ளது

2 mins read
a00a50ad-71b7-45c8-9c6a-9b5c5032378c
மலேசியாவில் நான்கு பகுதிகளில் மட்டுமே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  - படம்: இபிஏ
multi-img1 of 2

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் காற்றுத்தரம் மேம்பட்டுள்ளது. நான்கு பகுதிகளில் மட்டுமே காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரின் சேராஸ் பகுதி (155), சிலாங்கூரின் ஷா அலாம் (102), நெகிரி செம்பிலானின் நிலாய் (157), சிரம்பான் (151) ஆகியவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஆக அதிக அளவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவான இடங்களாகும்.

நாட்டின் மற்ற பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்தது.

முன்னதாக, புகைமூட்டம் மோசமடைந்ததாகவும் 13 பகுதிகளில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாகவும் அந்நாட்டின் சுற்றுப்புறத் துறை கூறியிருந்தது.

சிங்கப்பூரில் தளம்கொண்டுள்ள ஆசியான் நிபுணத்துவ வானிலை நிலையம், சுமத்ராவில் 121 இடங்களிலும் கலிமந்தானில் 122 இடங்களிலும் காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதைத் துணைக்கோளப் படங்கள் மூலம் கண்டதாக சுற்றுப்புறத் துறையின் தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபர் கூறினார்.

இருப்பினும், மலேசியாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் காணப்படவில்லை என்றார் அவர்.

கோலாலம்பூரின் சேராஸ் பகுதி (160), நெகிரி செம்பிலானின் நிலாய் (161), சிரம்பான் (156) பகுதிகள், திங்கட்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி ஆக அதிக அளவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவான இடங்களாக இருந்தன.

காற்றுத் தூய்மைக்கேட்டுத் தரக் குறியீடு 200ஐத் தாண்டினால், பள்ளிகளையும் பாலர்பள்ளிகளையும் மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று திரு வான் அப்துல் லத்தீஃப் கூறினார்.

காற்றுத் தூய்மைக்கேட்டுத் தரக் குறியீடு 100ஐத் தாண்டினால், பள்ளிகளிலும் பாலர்பள்ளிகளிலும் வெளிப்புற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, புகைமூட்டம் திரும்பியிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மலேசிய சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வது, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது ஆகியவை அவற்றில் அடங்கும் என்று அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் முகம்மது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

புகைமூட்டத்தின்போது பொதுமக்கள் வீட்டுச் சன்னல்களையும் மூடலாம் என்று அவர் சொன்னார்.

அவ்வப்போது மருந்தகங்களில் புகைமூட்டம் தொடர்பான நோய்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்துவரும் என்று டாக்டர் முகம்மது ராட்ஸி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்