வலைவீசித் தேடப்பட்டவர்; துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிரிந்தது

2 mins read
6e40f802-d9e3-4aa3-b464-dbb48816007f
டாம் ஃபிலிப்சும் அவரது பிள்ளைகளில் ஒருவரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று மளிகைக்கடையிலிருந்து திருடியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்து திருடியதைக் காட்டும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. - படம்: ஏஎஃப்பி

வெலிங்டன்: கடந்த நான்கு ஆண்டுகளாக டாம் ஃபிலிப்ஸ் என்பவரை நியூசிலாந்துக் காவல்துறை வலைவீசித் தேடியது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமது முன்னாள் காதலியுடன் சண்டை போட்ட பிறகு, டாம் தமது மூன்று பிள்ளைகளுடன் தலைமறைவானார்.

இந்நிலையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நியூசிலாந்தின் வாய்காட்டோ பகுதியில் காவல்துறையினருக்கும் டாமுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் டாமைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

காவல்துறை அதிகாரி ஒருவருக்குத் தலையில் குண்டடி பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்துக் காவல்துறை தெரிவித்தது.

கொள்ளைச் சம்பவம் நிகழக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

டாம் ஃபிலிப்சும் அவரது பிள்ளைகளில் ஒருவரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று மளிகைக்கடையிலிருந்து திருடியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்து திருடியதைக் காட்டும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின.

இதுபோன்று அவர்கள் பலமுறை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் மாண்ட டாமுடன் அவரது பிள்ளைகளில் ஒருவர் இருந்ததாகவும் அவர் காயமடையவில்லை என்றும் அவர் தற்போது காவல்துறையின் பராமரிப்பின்கீழ் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

டாமின் மற்ற பிள்ளைகளின் இருப்பிடத்தை உடனடியாகக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

டாம் தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தலைமறைவானதிலிருந்து அச்சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களது நலன் குறித்து அக்கறை கொள்வதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்