சோல்: தென்கொரியாவில் அடுத்த மாதத் தொடக்கம்வரை அனல்காற்று தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெப்பநிலை 39 டிகிரி செல்சியசைத் தொடும் என்று கருதப்படுகிறது.
தென்கொரியாவின் தென்கிழக்கு வட்டாரங்களுக்கான அனல்காற்று குறித்த அவசரநிலை எச்சரிக்கையைக் கொரிய வானிலை நிர்வாகம் வெளியிட்டது. கியோங்சான், போஹாங், கியோங்ஜு நகரங்கள் அவற்றில் அடங்கும்.
இவ்வாண்டு நடப்புக்கு வந்த மூன்றடுக்குக் கட்டமைப்பில் அனல்காற்று குறித்த அவசரநிலை எச்சரிக்கை ஆக உயரியது. வெப்பநிலை தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு 35 டிகிரி செல்சியசுக்கும் மேல் இருந்து 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகப் போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டால் அந்த எச்சரிக்கை விடுக்கப்படும். வெப்பநிலை முன்னுரைப்பு குறைந்தது 38 டிகிரி செல்சியசாக இருந்தாலும் எச்சரிக்கை விடுக்கப்படும்.
சோலிலும் இஞ்சியோனிலும் திங்கட்கிழமை (ஜூலை 27) வெப்பநிலை 33 டிகிரி செல்சியசைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. குவாங்ஜு, பூசான் நகரங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை எட்டும் என்று கருதப்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசுக்கும் 37 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை நிர்வாகத் தகவல்களின்படி, நாடு முழுதும் தற்போதைக்கு இதேபோன்ற அதிக வெப்பநிலை நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

