ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் வெப்ப அலை; அதிகரிக்கும் காட்டுத் தீ அபாயம்

1 mins read
48208933-8c23-4353-b148-0f551814a73a
சென்ற டிசம்பர் 27ஆம் தேதி, மெல்பர்னின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஜனவரி 4ஆம் தேதி ஏற்பட்ட வெப்ப அலையால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாரிகள் நெருப்பு மூட்டத் தடை விதித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா தற்போது அதிக அபாயமுள்ள காட்டுத் தீ பருவத்தை எதிர்நோக்குகிறது. சென்ற வாரம், விக்டோரியா மாநிலத்தின் ‘கிரேம்பியன்ஸ்’ தேசியப் பூங்காவில் பெரிய அளவிலான தீ மூண்டது. அதில் வீடுகளும் விளைநிலங்களும் சேதமடைந்தன.

சில பகுதிகளில் வெப்பநிலை சராசரி அளவுக்குமேல் 14 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. மெல்பர்னில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தொடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மெல்பர்ன் விமான நிலையத்தில் ஜனவரி 4ஆம் தேதி காலை மணி 10.20க்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 7.20) வெப்பநிலை ஏற்கெனவே 32.8 எனப் பதிவானது. ஜனவரி மாதத்தில் பதிவாகும் சராசரி அதிகபட்ச வெப்பநிலையைக் காட்டிலும் அது 6 டிகிரி செல்சியஸ் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

விக்டோரியாவின் இரண்டு மாவட்டங்களில் நெருப்புத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. அவற்றில் 180 கிலோ மீட்டருக்கும் மேலான பரப்பளவைக் கொண்ட ‘விம்மேரா’ எனும் பகுதியும் அடங்கும். அங்குதான் தீ ஏற்படும் அபயாம் மிக அதிகம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்