தோக்கியோ: ஜப்பானில் கடந்த 2025ஆம் ஆண்டு நிலவிய கடுமையான கோடைக்கால வெப்பம் காரணமாக, வேலையிடங்களில் வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,803 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மிகக் கடுமையான வெப்பத்தால் ஜப்பானிய மக்கள் அவதியுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயில் காரணமாக வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டைவிட 2025ஆம் ஆண்டில் 546 அதிகம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு புதன்கிழமையன்று (மே 27) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31லிருந்து 19 ஆகக் குறைந்துள்ளது.
உயிரிழந்த 19 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவுகள் தொடங்கப்பட்ட 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். 2025ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிலவிய கடுமையான வெப்பமே இதற்குக் காரணம் என்று ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், நலத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளையில், உயிரிழப்புகள் குறைந்ததற்குக் கடந்த 2025 ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறை ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று அமைச்சு கூறியது. அதன்படி, ஊழியர்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிறுவனங்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 52 விழுக்காட்டினர் 50 அல்லது அதற்கும் அதிக வயதுடையவர்கள். அவர்களுள் 278 பேர் 65 வயது அல்லது அதற்கும் அதிக வயதுடைய பயணிகள் அல்லது குடியிருப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

