சிட்னி: கொளுத்தும் அனல் காற்று ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பரவி மோசமாகி வருகிறது.
இதனால், காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகாரிகள் விக்டோரியா மாநிலம் முழுவதும் தீ மூட்டும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் தற்பொழுது காட்டுத் தீ அபாயம் அதிகமாக ஏற்படும் பருவநிலையில் சிக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்ற வாரம் தீயணைப்பு வீரர்கள் விக்டோரியா மாநிலத்தின் கிரேம்பியன்ஸ் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீச் சம்பவத்துடன் போராடினர். அது பல வீடுகளையும் விவசாய நிலங்களையும் அழித்தது.
ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கணக்கில் இரண்டாவது பெரிய மாநிலமான விக்டோரியாவில் ஜனவரி 5ஆம் தேதி, வெப்பநிலை 45 டிகிரி செல்சியசை எட்டலாம் என அந்நாட்டு பருவநிலை ஆய்வு மையம் கூறியது. இதில் மாநிலத் தலைநகர் மெல்பர்னில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

