சோல்: தென்கொரியத் தலைநகரான சோலில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வெப்ப அலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோலில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஏற்கெனவே 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
“நாம் இதுவரை அனுபவித்திராத அளவில் கடும் வெப்பம் நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. வெளிநாட்டுச் செய்திகளில் மட்டுமே பார்த்த வெப்ப அலை நிலவரங்கள் இப்போது நம்முடைய உண்மைச் சூழலாகிவிட்டன,” என்று ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற வெப்ப அலை தொடர்பான கூட்டத்தில் அதிபர் லீ ஜே மியுங் தெரிவித்தார்.
வெப்ப அலை தணியும்வரை அனைத்து அமைச்சுகளும் உள்ளூர் அரசாங்கங்களும் தங்களிடம் உள்ள அதிகாரிகளையும் வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று திரு லீ உத்தரவிட்டார்.
மேலும், மக்களின் உயிர், பாதுகாப்பு ஆகியவை குறித்து வலியுறுத்திய அவர், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றார்.
அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் வெளிப்புறத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு நேரங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக, வேலையிடங்களில் காயங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரித்துள்ள நிலையில், தென்கொரிய நிறுவனங்கள் ஓய்வு நேரங்களை நீட்டித்து, வேலை நேரங்களை மாற்றியமைத்து, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தி வருகின்றன.
இருப்பினும், அந்த நடவடிக்கைகள் பாதுகாப்பில் முதலீடு செய்யக்கூடிய பெரிய நிறுவனங்களுக்கும் கடும் வெப்பத்தில் தொடர்ந்து பணிபுரியும் சிறிய, வெளிப்புறப் வேலையிட ஊழியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதும் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ள நிலையில், அரசு பரிந்துரைத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தெற்கு கியோங்சாங் மாநிலத்தில் உள்ள யாங்சான் நகரில் அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


