மெக்சிகோ சிட்டி: கனமழை காரணமாக மெக்சிகோவில் குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டனர். பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாகப் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் உயிரிழப்புகளுக்கு அவை காரணமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
கனமழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹிடால்கோ மாநிலத்தில் 16 பேர் மாண்டுவிட்டதாகவும் குறைந்தது 1,000 வீடுகளும் நூற்றுக்கணக்கான பள்ளிகளும் சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
புவேபலா மாநிலத்தில் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் காரணமாகக் குறைந்தது ஒன்பது பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐவரைக் காணவில்லை.
வெராகுரூஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக இருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முழங்கால் அளவு வெள்ள நீரில் அவசரகால மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடும் படங்களை மெக்சிகோ அதிபர் கிளோடியா ஷைன்பவும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோரை மீட்கவும் நிலைமையைக் கண்காணிக்கவும் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தப்படுத்தவும் 5,400க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் பணியமர்த்தியுள்ளதாக மெக்சிகோவின் தற்காப்பு அமைப்பு கூறியது.
இதற்கிடையே, மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா தீபகற்பத்தையும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோரப் பகுதிகளையும் புயல்கள் உலுக்கி வருகின்றன. அந்தப் புயல்கள் காரணமாக அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.