ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜுயிஸ் டி ஃபோரா நகரில் பெய்த கனமழையினால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
440 பேர் வீடுகளை இழந்திருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மழையினால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதோடு, நகராட்சிப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளிலும் மாயமானோரைத் தேடும் பணிகளிலும் சிறப்புப் படைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள இந்நகரம் பேரிடர் நிலையை அறிவித்துள்ளது.
இதையடுத்து, உதவிக்காக மத்திய மற்றும் மாநில அமைப்புகள் அழைக்கப்பட்டுள்ளன.
பிரேசிலின் பெரும்பாலான பகுதிகளில் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான கோடைக்காலத்தில் மழைக்காலம் உச்சத்தில் இருக்கும். இக்காலகட்டத்தில் அடிக்கடி கனமழை, இடியுடன் கூடிய மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.
ஜுயிஸ் டி ஃபோரா நகர வரலாற்றிலேயே இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் ஆக அதிக அளவிலான மழை பெய்துள்ளது.
வழக்கமாக இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய மழையைவிட இரண்டு மடங்கு அதிகமாக இதுவரை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மேயர் மார்கரிடா சலோமாவோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரேசிலின் தேசிய வானிலை ஆய்வு மையம், மினாஸ் ஜெரைஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 14 மாநிலங்களின் சில பகுதிகளுக்குச் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

