சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு வட்டார கிராமப்புறங்களில் பரவும் கடுமையான காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.
குடியிருப்பாளர்கள் யாரேனும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமலிருந்தால் ஆபத்து என்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீயால் ஏறக்குறைய 65,000 ஹெக்டேர் நிலப்பரப்பு கருகிவிட்டது. இது கிட்டத்தட்ட சிங்கப்பூரின் நிலப்பரப்புக்குச் சமம்.
வேகமாகப் பரவும் காட்டுத் தீ தற்போது மெல்பர்னிலிருந்து 330 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள டிம்பூலா எனும் கிராமத்தை நெருங்குவதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 27ஆம் தேதி மாலை நிலவரப்படி, விக்டோரியா மாநில தேசியப் பூங்காவின் 40 கிலோமீட்டர் பரப்பளவு தீயால் பாதிக்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறை கூறியது.
தீயணைப்பாளர்கள் அதை அணைக்கக் கடுமையாகப் போராடுவதாகக் கூறப்பட்டது.
ஏறக்குறைய 1,600 பேர் வசிக்கும் டிம்பூலா கிராமத்திற்கு அருகே உள்ள நிவாரண முகாமில் தங்குவதற்கு 100 பேர் பதிந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது.
யாரும் வெளியாகமலிருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறிய அதிகாரிகள், உட்புறத்திலேயே பாதுகாப்பாக இருந்து நிலைமையைக் கண்காணிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஜனவரி 27ஆம் தேதி மின்னல் தாக்கியதில் கிரேம்பியன்ஸ் தேசியப் பூங்காவில் சிறிய அளவிலான காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் மற்ற இடங்களிலும் தீ மூண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.