ஜப்பானில் பெருமழை: வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

ஜப்பானில் பெருமழை: வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவு

1 mins read
bd8de239-0704-468c-aee1-960803d45446
தென்மேற்கு ஜப்பானில் ககோ‌ஷிமா வட்டாரத்தின் ஐரா நகரில் நிலச்சரிவால் சேதமுற்ற வீடுகள் (ஆகஸ்ட் 10). - படம்: இபிஏ

தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் பெருமழையையும் நிலச்சரிவுகளையும் தொடர்ந்து மில்லியன்கணக்கானோரை வீடுகளைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) வலியுறுத்தியுள்ளனர்.

சிலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குமமோத்தோ வட்டாரத்தில் ஒரு மீட்டர் உயரத் தண்ணீரில் வீடுகள், கடைகள், வாகனங்கள் முதலியவை மூழ்கியிருப்பதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.

கரைபுரண்டோடும் ஆறுகள் வாகனங்களை அடித்துச்சென்றன. தெருக்கள் கடுமையாகச் சேதமுற்றன.

தமனா நகரில் 37 சென்டிமீட்டர் மழை பெய்தது. அந்த வட்டாரத்தில் அதுவே ஆக அதிகம் என்று ஜப்பானிய வானிலை அமைப்பு தெரிவித்தது.

“உயிருக்கு ஆபத்து உண்டாகக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. உடனடியாகப் பாதுகாப்பை உறுதிசெய்தாக வேண்டும். பேரிடர் வழக்கமாக ஏற்படாத இடங்களிலும்கூட அதிக விழிப்புடன் இருப்பது முக்கியம்,” என்று வானிலை அமைப்பு கூறியது.

தென்மேற்கு வட்டாரத்தில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தீ, பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

குமமோத்தோ வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 384,000 குடியிருப்பாளர்களுக்கு உடனே வெளியேறும்படி கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோசா, மிசாத்தோ, ஃபுக்குவோக்கா முதலிய நகரங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிலரைக் காணவில்லை என்று தேசிய ஒளிபரப்பு நிலையமான என்எச்கே கூறியது.

குறிப்புச் சொற்கள்