சிட்னி: நியூசிலாந்தின் தென் தீவில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால், சாலைகளும் மேம்பாலங்களும் மூடப்பட்டன.
கடந்த வாரயிறுதியில், தலைநகர் வெலிங்டனைக் கடும் புயல் உலுக்கியதில், பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. தற்போது புயல் தெற்கு நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஆறுகளில் நீர் மிக விரைவில் அதிகரிக்கக்கூடும் என்றும் நியூசிலாந்தின் வானிலை நிலையம் எச்சரித்தது. அதன் காரணமாக, நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
பெரிய அலைகளையும் ஆபத்தான கடல்நிலைகளையும் எதிர்பார்க்கலாம் என்றும் அது கூறியது.
நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சுக்கு அருகில் அவரசநிலை பிறப்பிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, மரங்கள் சாய்ந்தன. நிலச்சரிவுகளால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மோசமான வானிலை தொடர்வதால், தண்ணீரைச் சேமித்துவைக்கும்படி குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், தண்ணீரைக் கொதிக்கவைத்து அருந்தும்படி சில குடும்பங்களிடம் ஆலோசனை கூறப்பட்டது.

